gold-plan-241115தங்க நகைகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு சதவீதம் கலால் வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை வியாபாரிகள் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த மூன்று நாட்கள் முடிந்ததும் மத்திய அரசு எவ்வித உறுதி மொழியும் கொடுக்காததால் மேலும் மூன்று நாட்களுக்கு போராட்டத்தை நீட்டிக்க தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்தனர்.

தங்க நகை கடைகள் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை உள்பட பல நகரங்களில் தங்க நகைகள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சுமார் 1460 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகளுக்கும் இழப்பு நேரிட்டது.

இந்நிலையில் நேற்று நகைக்கடை வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னையிலும் 7 ஆயிரம் நகைகடைகள் 4 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு வழக்கம்போல் வியாபாரம் நடந்தது.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கநகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷனாலி கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய நலத்துறை அமைச்சக அதிகாரிகள் நகை வியாபாரிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு நடத்த முன்வந்து உள்ளனர். மும்பையில் திங்கள் அன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

பொதுமக்களின் வசதிக்காக கடைகளை திறக்கும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெற்று உள்ளோம். பேச்சுவார்த்தை முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Jewellery shop owners strike withdrawn.