voters7316தமிழகம், புதுவை உள்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்கைலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த தேர்தலில் முதல் முறையாக மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதன்படி முழுக்க முழுக்க பெண் அதிகாரிகள், பெண் ஊழியர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகள் ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் தமிழ்நாடு முழுவதும் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

இதில் தேர்தல் பதிவு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், போலீசார் என அனைவரும் பெண்களாக நியமிக்கப்படுவார்கள். பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தேர்தலின் போது பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் எங்கு குறைவாக பதிவானதோ அந்த வாக்குச்சாவடிகள் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பெண் வாக்காளர்களின் வாக்குச்சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளையும் பெண்களையே நியமனம் செய்யுமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து கட்சிகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையர் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தலா ஒன்று வீதம் 16 பெண்கள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதற்கான வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களின் போது கொளத்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையார் ஆகிய இடங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு மோரும் வழங்கப்பட்டது.

English Summary:Election Commision introduces a new idea to attract female voters.