தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வரும் நிலையில் தேர்தல் தினத்தன்று வெளியூரில் உள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நேற்று மக்களவையின் கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா, விழாக் காலங்களில் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை போல, தேவைப்பட்டால் தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களில் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். எனினும், மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கே வந்து வழக்கம் அவர்களிடையே இருந்து வருகிறது. அவர்களின் வசதிக்காக தேர்தல் காலங்களில் தேவைப்பட்டால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கூறினார். மேலும் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அந்தோதியா ரயில்களில் சாதாரணக் கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால், தேஜஸ் மற்றும் ஹம்சஃபர் ரயில்களில் ‘தேவைக்கேற்ப கட்டணம்’ (தேவை அதிகமாக இருந்தால் கட்டணமும் அதிகமாக இருக்கும்) வசூலிக்கப்படும் என்று கூறினார்.
English Summary: Special trains during the elections. Railways Review.