தபால்துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உள்பட பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், பிபிஎப் என கூறப்படும் பொதுநல நிதி ஆகியவை உள்பட பல திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தாலும் முதலீடுக்கு மோசமில்லை என்ற காரணத்தால் தபால்துறை சேமிப்பு உள்பட பல திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு திடீரென அதன் வட்டி விகிதங்களை குறைத்திருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுவரை பிபிஎப் திட்டத்துக்கு 8.7 சதவீதம் என்ற அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்யும் தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வழக்கமான சேமிப்புக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. தபால் அலுவலக சேமிப்புகளுக்கு ஓராண்டுக்கு 8.4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு சேமிப்புக்கு 8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு (என்எஸ்சி) வழங்கப்படும் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளில் முதிர்வடையும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 9.2 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
பிப்ரவரி 16-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில் சந்தை நிலவரத்துக்கேற்ப சிறு சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் என தெரிவித்திருந்தது. அப்போது சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இந்த வட்டிக் குறைப்பு தபால் அலுவலக சேமிப்புகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தது. அப்போது நீண்டகால முதலீட்டுத் திட்டங்களான மாதாந்திர முதலீட்டுத் திட்டம், பிபிஎப், மூத்த குடிமக்கள், பெண் குழந்தை முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை.
English Summary : Central Government acts to reduce interest for Savings plan such as Postal saving plans.