கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கை பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதால் தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு கருதி அரசின் முக்கிய திட்டங்களான கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி), செல்வமகள் சேமிப்புத்திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) உள்பட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்தது. இந்த வட்டிக் குறைப்பு ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், இப்போதைய சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வட்டிக்கு குறைப்பு அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மறுநிர்ணயம் செய்வது என்றும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் 1 முதல் அதாவது இன்று முதல் வரும் ஜூன் மாதம் 30 வரையிலான முதல் காலாண்டுக்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 8.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவே தொடரும். அதே நேரத்தில், 5 ஆண்டு தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக முதலீடு செய்யப்பட்டு மாதம்தோறும் வட்டி பெறும் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 9.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மூத்த குடிமக்களின் 5 ஆண்டு சேமிப்புத் திட்டங்களுக்கு தற்போது 9.3 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த வட்டி 8.6 சதவீதமாக இருக்கும். அஞ்சலகங்களில் 1, 2, 3, ஆண்டு தொடர் வைப்பு நிதிக்கு (ஆர்டி) இப்போது 8.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ஓராண்டு தொடர் வைப்பு நிதிக்கு 7.1 சதவீதமும், 2 ஆண்டு தொடர் வைப்புக்கு 7.2 சதவீதமும், 3 ஆண்டு தொடர் வைப்புக்கு 7.4 சதவீதமும் மட்டுமே வட்டியாக வழங்கப்படும். 5 ஆண்டு நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டு தொடர் வைப்புக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
English Summary: Various Savings Schemes interest reduce today onwards.