இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் விபத்துக்களும், அதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் பல விபத்துக்களுக்கு அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதே காரணம் என்று புள்ளி விபரங்கள் கூறுகிறது. எனவே அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பட்டௌ கருவி பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படியாக இன்று முதல் வர்த்தகப் பயன்பாடு கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதற்கான உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தும் முதல் கட்டப் பணிகளை மாநில நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் என வரையறுத்து புதியதாக பயன்பாட்டுக்கு வரும் வாகனங்களிலும், ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டுக்கான மின்னணு கருவியைப் பொருத்த வேண்டும். இதற்கு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 3,500 கிலோ எடைக்கு குறைவான போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநில, தேசிய “பெர்மிட் பெற்ற வர்த்தக வாகனங்களும் கருவி பொருத்த தேவையில்லை.
மாநில போக்குவரத்து ஆணையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் வேகக் கட்டுப்பாட்டு கருவி முத்திரையிடப்படும். இதனால் கருவியை மாற்றம் செய்யவோ அல்லது நீக்கவோ முடியாது என்று கூறினர்.
பழைய வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பாக, ஏப்ரல் 4-இல் நடைபெறும் மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே அதில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை வாகன தயாரிப்பாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் பொருத்தியாக வேண்டும். ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் வாகனங்களில், இந்த கருவி பொருத்தப்படுகிறது.
இதேபோல், 3-ஆம் நபர் காப்பீடு கட்டண உயர்வும், சுங்கக் கட்டண உயர்வும் இன்று முதல் அமலாகிறது. இதுதொடர்பாக ஏப்ரல் 3-ஆம் தேதியில் சென்னை போரூரில் தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷனின் ஆலோசனை கூட்டமும், 4-ஆம் தேதி வேலப்பன்சாவடியில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநாடும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
English Summary: Commercial Vehicle Speed Control device is Mandatory today onwards .