சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள கண்காட்சி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கண்காட்சியை சென்னை மக்கள் தவறாது பார்த்து மகிழும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிடலாம். கண்காட்சியை காண கட்டணம் ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
சென்னை கோட்டை, கேரள மாநிலம் மட்டஞ்சேரி அரண்மனை, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டணம் திப்பு சுல்தான் அருங்காட்சியகம் உள்பட 44 இடங்களில் மத்திய அரசின் அருங்காட்சியகங்கள் உள்ளன. இங்கு மாதந்தோறும் ஏதாவது ஒரு தலைப்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது கோட்டை அருங்காட்சியகத்தில் சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் சிந்து சமவெளி நாகரீக காலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை மனிதர்களின் சிகை அலங்காரம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள், ஓவியங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சுமார் 100 வகையான சிகை அலங்கார புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் பேரரசர் அசோகரின் சிகை அலங்காரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய புகைப்படம் இருந்த இடம் காலியாக விடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அதில் தங்கள் முகத்தை வைத்து அசோகரின் சிகை அலங்காரத்துடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல சுதந்திர போராட்ட பெண் வீராங்கனை பேகம் ஹஸரத் மகாலின் சிகை அலங்காரமும் உள்ளது. அவருடைய புகைப்படம் உள்ள இடத்தில் பெண்கள் தங்கள் முகத்தை வைத்து செல்பி எடுத்துக்கொள்ளலாம். இளையதலைமுறையை கவருவதற்காக இந்த ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு சிகை அலங்காரம் பற்றிய கையேட்டை இலவசமாக வழங்குகிறோம்.
கோட்டை அருங்காட்சியகத்தில் எண்ணை வண்ண ஓவியங்கள் கண்காட்சி அறை உள்ளது. இங்கு வரும் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்காக சைகை மொழி பெயர்ப்பாளர் ஓவியங்களை விளக்கும் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. பார்வையற்ற மாற்று திறனாளிகள் ‘பிரெய்லி’ முறையில் ஓவியங்களின் விவரங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1947–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி சுதந்திரம் அடைந்த பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் சுதந்திர கொடியும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : Photo exhibition of sculptures hairstyles until April 30 in Chennai.