12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்காக வழிகாட்டும் நிகழ்ச்சிகள் சென்னையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தி இந்து எஜுகேஷன் பிளஸ் உயர் கல்வி வழிகாட்டி கண்காட்சி-2016’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி இன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியை விஐடி துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், காக்னிசன்ட் நிறுவனத்தின் மனித ஆற்றல் மேம்பாட்டு துறையின் துணைத் தலைவர் சதீஷ் ஜெயராமன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் அசோசியேட் எடிட்டர் ஷாலினி அருண், ராஜலஷ்மி கல்விக் குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் காக்னிசன்ட் நிறுவன மனித ஆற்றல் மேம்பாட்டு துறை துணைத் தலைவர் சதீஷ் ஜெயராமன் பேசியபோது, “தொழில்நுட்ப புரட்சி காரணமாக நாடு அனைத்து துறைகளிலும் தற்போது அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதை தேடிக் கண்டுபிடித்து அடைய 100 சதவீதம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிரபல கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸ் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர். சார்லி சாப்ளினை ஹாலிவுட் திரையுலகம் நிராகரித்தது. ஆனால், அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றனர். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள மாணவர்கள் தங்களது கண்களையும், காதுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வ நாதன் பேசும்போது: ‘இன்ஜினீயர், டாக்டர், அக்கவுன்டன்ட் என எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் நீங்கள் வல்லுநர்களாக திகழ வேண்டும். இதற்கு மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் செல்லக் கூடாது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் வாழ்க்கை இதற்கு ஓர் உதாரணம். சாதாரண ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்த அவர் தனது கடுமையான உழைப்பின் மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தார். எனவே மாணவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் சிறந்து விளங்க ஓர் லட்சியத்தை உருவாக்கி அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அளவுக்கு ஆங்கில மொழி புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்
இந்நிகழ்ச்சியின் அசோசியேட் பார்ட்னர்களாக ராஜலஷ்மி கல்விக் குழுமம், பாரத் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், கற்பக விநாயகா கல்விக் குழுமம், மார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அண்டு ஆர்க்கிடெக்சர், ஸ்வர்ணபூமி, கல்வி இணையதளமான ஷிக்சா, ஈவென்ட் மேனேஜராக ஐ ஆட்ஸ் அண்டு ஈவென்ட்ஸ், பிஎஸ்என்எல் நிறுவனம், மிடாஸ், போதி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை உள்ளன.
English summary : Then read the 12th grade? Education in Chennai Trade Centre and Exhibition