தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் மே 1ஆம் தேதி 40 கம்பெனி துணை ராணுவப் படையினர் முதல்கட்டமாக வரவுள்ளனர். துணை ராணுவப் படையினர் தேவை தொடர்பாக டெல்லி சென்று ஆலோசனை நடத்திவிட்டு தமிழகம் திரும்பியுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இந்த தகவலை அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக ஏற்கெனவே ஒப்புதல் அளித்த 275 கம்பெனியுடன், கூடுதலாக 25 கம்பெனிகள் அனுப்பப்படுகின்றன. பறக்கும்படையில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் சேர்க்கப்பட உள்ளதால், முதல் கட்டமாக 40 கம்பெனிகள் மே 1-ம் தேதி விமானம் மூலம் தமிழகத்துக்கு வருகின்றன. இதில், 18 கம்பெனிகள் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து, அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும், 7 கம்பெனிகள் பெங்களூரு விமான நிலையம் வந்து தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், 15 கம்பெனிகள் சென்னைக்கும் வருகின்றன.
மேலும், ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் 118 பேர் தமிழகம் வந்து, பறக்கும்படைகளுக்கு பொறுப்பேற்க உள்ளனர். பணப் பட்டுவாடாவை கண்காணிக்க, தொகுதிதோறும் செலவின பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22-ம் தேதி தமிழகம் வருகின்றனர். இதுதவிர பணப் பரிமாற்றத்தை கண்காணிக்க, வருமானவரித் துறை சார்பில் மாவட்டத்துக்கு 9 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, அவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
மேலும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், காவல்துறை பார்வையாளர் களும் விரைவில் இணைந்து கொள்கின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தொகுதியில் இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததன்பேரில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணத்துக்கு பதில், கைபேசி ரீசார்ஜ் செய்து தரப்படுவதாகவும், பால்பாக்கெட், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் மூலம் பணப் பட்டுவாடா நடப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், கைபேசி சேவை நிறுவனங்களுடன் வரும் 15-ம் தேதி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கடந்த மாதம் ‘ரீ சார்ஜ்’ விவரங்கள், அடுத்தடுத்த மாதங்களில் ‘ரீசார்ஜ்’ விவரங்கள் பெறப்படும். அதிக அளவு வித்தியாசம் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, பால், செய்தித்தாள் விநியோகிப்பவர்களுடன் கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary : 40 paramilitary troops on May 1 visit to the state for protection. Rajesh lakkani Information