பண்டிகை, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் அதிக தேவைகளை கணக்கில் கொண்டு தென்னக ரயில்வே சுவிதா சிறப்பு ரயில்களை இயக்கி வந்தபோதிலும், அந்த ரயில்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் 25 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் விமான நிறுவனங்கள் 6 மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கட்டண சலுகையை வழங்கி வருகிறது. ஆனால், ரயில்வே துறையில் போட்டியாளர்கள் இல்லாத சூழலில் இந்த கட்டண முறையை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை, ரயில்சேவையையும் மேம்படுத்தாத நிலையில், சுவிதா போன்ற சிறப்பு ரயில்களில் கட்டணத்தை மட்டுமே பல மடங்கு உயர்த்தி ரயில்கள் இயக்குவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர், “மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சுமார் 25 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், வழக்கமான விரைவு ரயில்களிலும், சுவிதா போன்ற சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சுவிதா ரயில்களில் கட்டணத்தை குறைத்தால் தற்போது காலியாக செல்லும் 25 சதவீத இடங்களும் நிரம்பிவிடும் என்றும் தென்னக ரயில்வே இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
English Summary: Suvitha Special train Charge Hike.