தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தவர்களும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தவர்களும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கின்றதா? அல்லது சரியாக இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ள நமக்கு ஒரு இணையதளம் உதவியாக இருக்கின்றது. அந்த இணையதளம் குறித்து தற்போது பார்ப்போம்.

NVSP என்று கூறப்படும் NATIONAL VOTERS’ SERVICE PORTAL என்ற இணையதளம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.

அரசுக்கு சொந்தமான இந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம், ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அதை நாம் உறுதிப்படுத்தி கொள்ளலாம். இதற்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். அப்போது கம்ப்யூட்டர் திரையில் “search your name in electoral roll” என்று தோன்றும் இடத்தில் க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் electoralsearch.in என்ற புதிய பக்கம் தோன்றும். இதில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றதா? என்பதை இரண்டு முறைகளில் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்று, உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், மாநிலம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை பூர்த்தி செய்தால் வாக்காளர் பட்டியலில் உங்களுடை பெயர் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக உங்கள் வாக்காளர் அடையா அட்டை எண் மற்றும் மாநிலத்தை தேர்வு செய்தாலும் உங்கள் விபரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும்

வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற கண்டிப்பாக நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொருவரும் எளிதான முறையில் இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

English Summary : Website to check your name in voter’s list.