தனியார் பால் நிறுவனங்களின் கடும் போட்டியை சமாளித்து வெற்றிகரமாக இயங்கி வரும் ஆவின் நிறுவனம் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் 6 சுவைகளில் பிரீமியம் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபகாலமாக ஆவின் பால் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களூக்கு பல்வேறு புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. கால் லிட்டர் பால் பாக்கெட் விற்பனை, டிரைவ்-இன்-பார்லர், சிறிய, பெரிய குல்பி, லாங் லைஃப் குலோப்ஜாமூன், குச்சி ஐஸ் போன்ற பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் வாடும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் “பிரீமியம் ஐஸ்கிரீம்’ வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய வகை பிரீமியம் ஐஸ்கிரீம் 6 சுவைகளில் ஆவின் விற்பனையகங்களில் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நுகர்வோருக்கு தரமான பால் உபபொருள்களை வழங்குவதற்காக, அம்பத்தூரில் ரூ.32.40 கோடியில் புதிதாக பால் உப பொருள்கள் தயாரிக்கும் பண்ணை அமைக்கப்பட்டது. இந்தப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் தயாரிப்புத் திறன் நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டரில் இருந்து, 15 ஆயிரம் லிட்டராகவும், பால் உபபொருள்கள் பண்ணையின் உற்பத்தித் திறனானது, தற்போதைய அளவான நாள் ஒன்றுக்கு 7,500 லிட்டர் என்ற அளவிலிருந்து, 68 ஆயிரம் லிட்டர் என 9 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல பனீர், தயிர், லஸ்சி, புரோபயோடிக் லஸ்சி, மோர் பாக்கெட் உள்ளிட்டவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களை கவரும் வகையில், கோடையில் புதிய ரக ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். அந்த வரிசையில், நிகழாண்டு கோடை வெயிலில் பொதுமக்கள், குழந்தைகளை கவரும் வகையில் புதிதாக பிரீமியம் ஐஸ்கிரீம் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லவ்லி லிட்சி( ரூ.40), கிரீமி பட்டர் ஸ்காட்ச்(ரூ.40), ஸ்ட்ராபெர்ரி மெல்ட்(ரூ.40), பிளாக் கரன்ட் புளூ(ரூ.45), சாக்லேட் மேனியா(ரூ.45), பிஸ்தா பேஷன்(ரூ.55) என ஆறு சுவைகளில் பிரீமியம் ஐஸ்கிரீம் விற்பனைக்கு கிடைக்கும்.

125 மி.கி எடையளவு கொண்ட இந்த பிரீமியம் ஐஸ்கிரீம் வகைகள் பிரத்யேகமான பேக்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, கிரேப், பைனாப்பிள், ரோஸ்மில்க் என பல்வேறு சுவைகளில் குச்சி ஐஸ்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்கிரீம் உற்பத்தி திறன் அதிகரிப்பைத் தொடர்ந்து, அவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளது. இதுவரை, நாளொன்றுக்கு 1,500 லிட்டர் வரை மட்டுமே ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இது 4,500 லிட்டராக அதிகரித்துள்ளது. கோடை காலம் என்பதால், உற்பத்தி, விற்பனையும் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

English Summary : Aavin introduced 6 new type ice creams for this summer season.