ம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று முதல்கட்ட தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த நுழைவுத்தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. ஏற்கனவே தமிழக அரசு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் தற்போது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. இந்த மனுக்கள் நாளை (செவ்வாய்க் கிழமை) பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு மாநிலங்களும் மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களில், அந்தந்த மாநில அரசுகளே தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒருசில சில தனியார் கல்லூரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் 2018 வரை மாநில அரசுகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சில எம்.பி.க்கள் வலியுறுத்தியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதை ஏற்றுக் கொள்ளாததால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடு முழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary : Tamil Nadu government re-appeal for Medical entrance exam.