எப்.ஐ.ஆர் என்று கூறப்பாடும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதனை காவல்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்திய இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவாகும் முதல் தகவல் அறிக்கையை, அடுத்த 24 மணி நேரத்துக்குள், காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். முதல் தகவல் அறிக்கை என்பது பொதுமக்கள் சார்ந்த ஆவணம். ஆனால், அதனை போலீஸாரிடம் இருந்து அவ்வளவு எளிதாக பொதுமக்களால் பெற முடிவதில்லை. எனவே முதல் தகவல் அறிக்கையின் நகலை இணையதளத்தில் வெளியிட்டால், அதை வேண்டுவோர் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் இதுகுறித்து பதில் அளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றமும், அலகாபாத் உயர் நீதிமன்றமும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : FIR on the website within 24 hours. Supreme court ordered State and Central Government.