வருமான வரி செலுத்துவோர்கள் அளிக்கும் புகார்கள், குறைகளுக்கு மின்னணு முறையில் மிக விரைவில் தீர்வு காண இ-நிவாரண் திட்டத்தை மத்திய வருமான வரித்துறை தற்போது அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வருமான வரி செலுத்துவோர்களின் குறைகள் உடனடியாக களையப்படும் என கூறப்படுகிறது.

வருமான வரித்துறைக்கு இணையதளம் வழியாக தினமும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் வரி செலுத்துவோர் நேரடியாக வந்து தெரிவிக்கும் புகார்கள், குறைகளுக்கும் இ-நிவாரண் திட்டத்தின் மூலம் தீர்வுகாணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், அவர்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வருமான வரித்துறையை சில மாதங்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இது ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டமாகும். இதுவெறும் புகார்களைப் பதிவு செய்யும் நடைமுறை மட்டுமல்ல. வரி செலுத்துவோர் கூறும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் திட்டமாகும். வருமான வரி தொடர்பான தங்களுக்கு எழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் வரி செலுத்துவோர் இங்கு தீர்வுகாண முடியும். புகார்களுக்கு முடிந்த அளவுக்கு விரைவாகத் தீர்வுகாண முடியும். இ-நிவாரண் திட்டம் முறையாக செயல்படுவதைக் காண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

English Summary : Income Tax department to ensure ‘e-nivaran’ program.