மே 4ஆம் தேதி தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளதால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கோடை மழையை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து வெப்பத்தை தணித்தது. ஆனால் தற்போது மீண்டும் வெயில் அதிகரித்துள்ளது.
‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கியதில் இருந்தே சென்னையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து கொண்டிருந்த நிலையில் நேற்று 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது. (நுங்கம்பாக்கத்தில் 105.44 டிகிரி, மீனம்பாக்கத்தில் 106.16 டிகிரி) காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சாலைகளில் அனல் காற்று பலமாக வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர். வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள் வெப்ப காற்றையே உமிழ்ந்தன. மின்சார ரெயில், மாநகர பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வியர்வையால் குளித்தபடி சென்றனர்.
கடுமையான வெயில் காரணமாக சென்னையில் இயங்கி வரும் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இளநீர், தர்பூசணி, பழச்சாறு, ஐஸ்கீரீம் போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. வெயிலுக்கு பயந்து பலர் பகல் வேளையில் பயணங்களை தவிர்த்தனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்காக மாலை நேரத்தில் கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலாதலங்களுக்கு பலர் படையெடுத்தனர்.
அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ளதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் நேற்று அதிகபட்ச வெயில் பதிவாகி இருந்தாலும், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் 2 செ.மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
English Summary : Agni-star completes the day after tomorrow. Maximum temperature recorded in Chennai.