12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போது விறுவிறுப்பாக விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளின் மீது இருந்த ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இம்முறை விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்றும், வழக்கம்போல் பி.காம் என்னும் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி தொடங்கப்பட்டு விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் மே 26-ஆம் தேதியோடு முடிவடைந்தது. ஒருசில அரசு கல்லூரிகள் இன்று கடைசி தினமாக அறிவித்துள்ளன.
மே 26 அதாவது நேற்று வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது. பிளஸ் 2 முடித்தாலே பொறியியல் படிப்பில் சேர்வது என்ற நிலை படிப்படியாக மாறி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது 2016-17 கல்வியாண்டிலும் தொடர்கிறது.
2016-17ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் கே.சீதா லட்சுமி கூறியதாவது: 2016-17 கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதுவரை 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட கூடுதலாகும். படிப்புகளைப் பொருத்தவரை பி.காம்., பி.எஸ்சி. ஊட்டச் சத்து போன்ற படிப்புகளுக்கு மிக அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்தக் கல்லூரியில் 2014-15 கல்வியாண்டில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2015-16 கல்வியாண்டில் 14,300 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராணி மேரி கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் கூறியதாவது: கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமைதான் முடிவடைகிறது. இருந்தபோதும், விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டை விட கூடுதலாக விற்பனையாகியிருக்கிறது. வியாழக்கிழமை வரை 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. படிப்புகளைப் பொருத்தவரை பி.காம். படிப்புக்குத்தான் மிக அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 2,700 பேர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கணினி அறிவியல் படிப்புக்கு அதிமானோர் விண்ணப்பித்துள்ளனர். மற்ற படிப்புகளைப் பொருத்தவரை 600 முதல் 400 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன’ என்று கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறியதாவது: மாநிலக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் கூடுதலாகும். மேலும் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மேலும் 1,000 விண்ணப்பங்கள் விநியோகமாக வாய்ப்பு உள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பு கல்லூரி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல், பிசிஏ மற்றும் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அவ்வப்போது பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும். கடந்த 2015-16 கல்வியாண்டிலும் இந்தப் படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட படிப்புகளில் 20 சதவீதம் அளவுக்கு இடங்களை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. இதுபோல, இந்த ஆண்டும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் 20 முதல் 25 சதவீதம் வரை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary : Increase in Arts and Science applications. Will extra seats allocated.