மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டதன் காரணமாக இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு முதல்கட்ட நுழைவுத்தேர்வும் முடிந்தது. இந்நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு இந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வு இன்றி கவுன்சிலிங் மூலம் மாணவர்களை சேர்க்க அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், இந்த அவசர சட்டம் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, சில மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஏதேனும் மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், தங்களை விசாரிக்காமல் அவசர சட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியதோடு, பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் குழப்பம் ஏற்படும். தற்போது தடை விதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் உள்பட பல மாநில மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary : Supreme court denied to ban entrance exam emergency law.