சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை புத்தகக்கண்காட்சி தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 39-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 700 அரங்குகளி்ல் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
நேற்று துவங்கிய புத்தக கண்காட்சி ஜூன்13 ஆம் தேதி வரை நடைபெறும். புத்தகக் கண்காட்சியை தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே துவங்கும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூல் செய்யப்படும்.
தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கன்னட நூல் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி எழுத்தாளர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள எழுத்தாளர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். தினமும் மாலையில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்படும். ஓவியப்பயிற்சி பட்டறையில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்படும். தினசரி குறும்படங்களும் வெளியிடப்படும். படைப்பாளிகளுடன் பார்வையாளர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary : Chennai Book fair started.