கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது., இந்நிலையில் வரும் 21ஆம் தேதி 2வது சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யோகா குறித்த விழிப்புணர்ச்சியை இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலக நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் அடுத்த 4 மாதங்களில் 2 கோடி குழந்தைகளுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள 2-வது சர்வதேச யோகா தினத்தை நடத்த முடிவு செய்துள்ள அவர், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் ‘நிலையான வளர்ச்சிக்கு யோகா’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
அதேபோல் சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை மக்களுக்கும் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில், மருத்துவக் கழக துணைத் தலைவர் டாக்டர் பிரம்மானந்தம், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) துணைத் தலைவர் தேவராஜ் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடலை மேம்படுத்தும் தொழில்நுட்பம்தான் யோகா. இந்த நுட்பத்தால் மாற்றம் நிகழ்வது என் கையிலோ, மற்ற அமைப்புகள் கையிலோ மட்டுமல்லாது, தனி நபர் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக அளவில் பொதுமக்கள் நன்மை பெற முடியும்.
சமீபகாலத்தில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 1,700 பேரும், 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 9 ஆயிரம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வாழ்க் கையின் அடிப்படை சரியாக புரியா ததுதான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். இதுதொடர்பாக 9 மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருமாறு வலியுறுத்தியுள்ளேன். நாடு முழுவ தும் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். நாடு, மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்தது யோகா. எனவே இதன் பயனை அனைவரும் பெற வேண்டும். யோகா பயிற்சியை சிறப்பாக கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் 50 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 4,500 பேருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என்று அவர் கூறியுள்ளார்.
English Summary: Yoga training to more than 4500 Peoples in Chennai on June 21.