கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு நடைபெற்றது. முதல்கட்ட JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், JEE அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களில் வெறும் 36 ஆயிரத்து 566 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய 4 ஆயிரம் பேர்களில் 650 பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆர்.ராகுல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவருக்கு 73-வது இடம் கிடைத்துள்ளது.
சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி உள்பட 23 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பிடெக் படிப்புகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்து 575 இடங்கள் உள்ளன. தற்போது அட்வான்ஸ்டு தேர்வில் 36 ஆயிரத்து 566 பேர் தேர்ச்சி பெற்றிருப்ந்தாலும் அவர்களில் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் 10 ஆயிரத்து 575 பேர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்த மாணவர் ராகுல் சென்னை ஐஐடி-யில் பிடெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர விரும்புவதாக தெரிவித்தார்.
English Summary: IIT Entrance Exam Result. Chennai Student First Place in Tamilnadu Level.