Book Fairகடந்த 1ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் ஆரம்பித்து பொதுமக்களின் மாபெரும் வரவேற்புடன் நடைபெற்று வந்த 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் இந்த விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் என்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில், வேளாண்துறை ஆணையர் மு.ராஜேந்திரன் பங்கேற்று, வெள்ளிவிழா கண்ட பதிப்பகங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த புத்தக கண்காட்சியின் வெற்றி குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடைபெற வேண்டிய புத்தகக் கண்காட்சி, சென்னையில் பெய்த பெருமழை காரணமாக தற்போது நடைபெற்றுள்ளது. விழா நடைபெறும் திடலில் ஒரு சில வசதிகள் குறைவாக இருந்தபோதிலும், மக்கள் பெருவாரியான ஆதரவளித்து இந்தக் கண்காட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். கடந்த 13 நாள்களில் சுமார் 10 லட்சம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த முறை அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் வந்திருந்தது கூடுதல் சிறப்பு. பள்ளி மாணவ, மாணவிகள், புத்தகக் கண்காட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் 5 லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் பல்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் ஏராளமான மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு வந்தனர்.

இந்த முறை கண்காட்சியில் சுமார் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது அதிகம். அடுத்த ஆறு மாதங்களில், அதாவது வரும் ஜனவரி மாதத்தில் 40-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நிச்சயம் நடைபெறும். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் பெய்த மழையால் கண்காட்சியின் சில அரங்குகள் பாதிக்கப்பட்டன. அதில் சேதமடைந்த புத்தகங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு காந்தி கண்ணதாசன்.கூறினார்.

English Summary: Chennai Book Fair Concluded. Books Sold in Rs 15 Crore.