amma191113தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய ‘அம்மா உணவகம்’ பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் 300 இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களால் பலரது பசி போக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் அம்மா உணவகம் செயல்படுவதால் பலருக்கு இது வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. காலை, மதியம், இரவு மூன்று வேளையும் மிகக்குறைந்த செலவில் வயிறாற சாப்பிடக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த உணவகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தலுக்கு முன்பிருந்தே எழுந்து வந்தன. தேர்தலுக்கு பின்னர் கண்டிப்பாக சென்னையில் அம்மா உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி தரப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை மாநகரில் அம்மா உணவகங்களை மேலும் 107 இடங்களில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 33 இடங்களில் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் 47 இடங்களில் அம்மா உணவகம் கட்ட ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 27 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டிற்குள் 107 அம்மா உணவகங்களும் புதியதாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய மக்கள் வசிக்க கூடிய பகுதியை கண்டறிந்து அங்கு அம்மா உணவகம் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருமானம் கிடையாது. ஆனாலும் ஆயிரக்கணக்கான சுய உதவி குழுக்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது செயல்பட்டுவரும் 300 அம்மா உணவகங்களிலும் 3600 பெண்கள் வேலை செய்து வருகின்றனர். புதிதாக தொடங்க உள்ள உணவகங்களுக்கு 1200 பெண் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊழியர்களின் சம்பளம், உள்ளிட்ட பல்வேறு நிர்வாக செலவுகளுக்கு மாநகராட்சி நிதி ஒதுக்கி செலவு செய்து வருகிறது.

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 3 ரூபாய்க்கு தயிர்சாதம், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், இரவில் சப்பாத்தி போன்றவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : 107 more Amma restaurants in Chennai.