சென்னை மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையிலான சுரங்கவழிப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூன் 25ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அதனை அடுத்து 6 மாதங்களுக்கு பின்னர் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடில் இருந்து ஷெனாய்நகர் வரையில் ஒட்டு மொத்த பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இறுதியாக சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் ரயில் இன்ஜின் (85 டன் எடை கொண்டது) மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரயில் பாதையின் தன்மை, ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தும் இடம், ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்புப் பணிகள், சிக்னல்களின் செயல்பாடுகள் தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சட்டப்பேரவை தேர்தல் காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு – ஷெனாய்நகர் இடையே ஜூன் 25-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘கோயம்பேடு – ஷெனாய்நகர் இடையே சுரங்கப் பாதையில் ரயில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டோம். வரும் 24 அல்லது 25-ம் தேதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கவுள்ளோம். சுரங்கப் பாதையில் முதல்முறையாக மெட்ரோ ரயிலை ஓட்டவுள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கும்.

பின்னர், இது தொடர்பான அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமை யிலான குழு வந்து ஆய்வு நடத்திய பின்னரே, தமிழக அரசு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கும்’ என்று கூறினர்.

English Summary : Authorities explains about Koyambedu to Shenoy nagar metro train trail run.