busday-1சென்னையில் நேற்று முன் தினம் அரசு மற்றும் அரசு உதவி பெற்ற கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளிலும் இரண்டாவது நாளிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பேருந்து தின கொண்டாட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், மாணவர்களின் கொண்டாட்டத்தால் சென்னையில் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஒருசில மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

இந்நிலையில், பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் ஆணையர் தே.க.ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் அபய்குமார்சிங், கே.சங்கர், எஸ்.என்.சேஷசாயி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் சென்னை முழுவதிலும் உள்ள அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள், மாநகர அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்:

1. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்.

2. மாணவர்களின் உடைமைகளைச் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

3. கல்லூரி நுழைவு வாயில்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், மாணவர் விடுதிகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.

4. முன்னாள் மாணவர்களை அனாவசியமாக கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது

5. பேருந்து தின கொண்டாட்டம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விஷயங்களிலும், ஒழுங்கீனச் செயல்களிலும் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறினால் மாற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

6. பேருந்தில் மாணவர்கள் பிரச்னையால் பொதுமக்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

7. பேருந்துக்குள் கேமரா பொருத்தப்பட வேண்டும்

மேற்கண்ட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன. தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர்களும், நிர்வாகிகளும் உறுதி அளித்தனர்.

English Summary: Meeting for Control the Bus day Celebration.