10884286_10205656123341133_185377904_oசென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதுதான். அதிலும் பீக் ஹவரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ரெயில் பயணிகளின் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட செல்போன் மூலம் மின்சார ரயில் டிக்கெட் பெறும் வசதியை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியது. ஆயினும் இது தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாததால் இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஜூலை 12-ம் தேதி வரை 14 ரயில் நிலையங்களில் நடத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வசதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் எழும்பூர் தாம்பரம் வழித்தடத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இந்த வசதி படிப்படியாக மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

இணையதளம் வசதியுள்ள ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் செல்போன் மூலம் இந்த வசதியை பெற முடியும். ரயில் நிலையத்தை சுற்றி உள்ள 5 கி.மீ. தூரத்துக்குள் வரும்போது, மின்சார டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கடந்த 2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 281 பேரும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 696 பேரும் செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த டிக்கெட்டில் இது வெறும் 0.52 சதவீதமாகும். இந்த எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த தெற்கு ரயில்வே பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

அதன்படி, இதற்கான விழிப்புணர்வு முகாம் இன்று வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் தொடங்குகிறது. பின்னர், பெரம்பூர், ஆவடி, வேளச்சேரி, திருவான்மியூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளுர், சென்ட்ரல் ரயில் நிலையம் கடற்கரை, தரமணி, தாம்பரம், மாம்பலம், குரோம்பேட்டை, பூங்கா என மொத்தம் 14 ரயில் நிலையங்களில் நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, டிக்கெட் முன்பதிவுக்கான செயலி இலவசமாக பதிவிறக்கம் செய்து தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

English Summary: How to get cell phone electric train ticket? Awareness Camp at 14 places in Chennai.