CPF Exam Syllabusமத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் முதல்முறையாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் மட்டும் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும்.
கடந்த ஆண்டு வரை குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நிலை-1, நிலை-2 என்ற இரு தேர்வுகளும், குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் நேர்முகத்தேர்வும், திறன் தேர்வும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. ஆனால் அதற்கு பதிலாக தேர்வு முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து பணியாளர் தேர்வாணைத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய தேர்வுமுறையில் முன்பிருந்த பேனா-வழி தேர்வுமுறை நீக்கப்பட்டு கணினிவழித் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 3 நிலைகளில் தேர்வு அமைந்திருக்கும். முதல் இரண்டு நிலை தேர்வுகளும் கணினிவழியில் மட்டுமே நடத்தப்படும். முதல் நிலை தேர்வில் பொது விழிப்புத்திறன் மற்றும் பகுத்தாராயும் திறன், பொது அறிவு, கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் தலா 25 கேள்விகள் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்.
இதில் வெற்றிபெறுவோர் 2-ம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுவும் கணினிவழியில் நடைபெறும். முதல் இரு நிலை தேர்வுகளில் வினாக்களுக்கு தவறாக விடையளித்தால் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் அரை மதிப்பெண் கழிக்கப்படும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் ஆங்கிலம் அல்லது இந்தியில் விரிவாக பதில் எழுத வேண்டும். கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல், விண்ணப்பம் எழுதுதல் ஆகியவற்றில் 100 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்பார்கள். குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் 4-வது நிலையில் திறன்தேர்வு நடத்தப்படும். முதல் நிலை, 2-ம் நிலை, 3-வது நிலை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்தபடி, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. இவ்வாறு கருப்பசாமி கூறினார்.
மேற்குறிப்பிட்ட பல்வேறு பணிகளில் 2016-ம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்பும் வகையில் முதல் நிலை தேர்வானது ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் கணினிவழியில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுத இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அகில இந்திய அளவில் 33 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
English Summary: For the first time the central government Online Group-B, C-section Exam Start August 27