சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் அமோக ஆதரவுடன் இயங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் கட்டணங்கள் பிற மாநிலங்களில் உள்ள கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் தற்போதுள்ள கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 உயர்த்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சின்னமலை-விமான நிலையம் வரை இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையரை இறுதிகட்ட சோதனை நடத்த அழைத்து இருக்கிறோம். அவர் வந்து ஆய்வு செய்த பின்னர் அறிக்கை தருவார். அந்த பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கலாம் என உறுதி அறிக்கை தருவார். ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அவரிடம் இருந்து கடிதம் வந்த பின்னர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் சின்னமலை-விமான நிலையம் இடையே சேவை தொடங்கும் என்றனர்.
2வது கட்டமாக தொடங்கப்படும் இந்த சேவையில் ஒன்று அல்லது 2 நிலையங்களில் ஒரு சில பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. அதுவும் விரைவில் முடிக்கப்பட்டு விடும். ரெயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தவாரம் அட்டவணை தயாரிக்கப்பட்டு இந்த பாதையில் இறுதிசோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. கடந்த வாரம் ரிசர்ஸ் டிசைன் மற்றும் ஸ்டேண்டார்டு ஆர்கனைசேஷனை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்து சின்னமலை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கு அனைத்து தகுதியும் இருப்பதாக தெரிவித்து சென்றனர்.
சென்னையில் அடுத்த கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க இருப்பதால் அதன் கட்டணமும் நிர்ணயிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 உயர்த்த திட்டமிட்டுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை செல்ல ரூ. 50 கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இதுவே அதிகபட்ச கட்டணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Metro rail fare will rise? CMRL