ஆந்திரபிரதேச மாநிலம் ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் காரணமாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீருக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி தண்ணீர் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த நிலையி இந்த ஆண்டு இதுவரை ஒரு டிஎம்சி கூட தண்ணீர் வரவில்லை. கிருஷ்ணா நீரை சென்னைக்கு வழங்குவது தொடர்பாக ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கும், தமிழகத்துக்கும்தான் ஒப்பந்தம் உள்ளதாகவும், தற்போது, தெலங்கானா அரசிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் ருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
12 டிஎம்சி: கிருஷ்ணா நதிநீர் பகிர்வு ஒப்பந்தப்படி கர்நாடக, ஆந்திர அரசுகள் சார்பில் 12 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி வரை கிருஷ்ணா நீர் கிடைத்தது. அதன்பிறகு, நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 12 டிஎம்சி வழங்கப்பட வேண்டும். ஆனால், நிகழாண்டில் இதுவரை, கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட பெறப்படவில்லை.
வறட்சிக்குப் பிறகு, பருவமழை தீவிரம்: கடந்த மாதம் வரை ஆந்திரத்தில் கடும் வறட்சியும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தன. அதன் காரணமாகவும், கிருஷ்ணா நதியில் நீர் இருப்பு குறைந்தது.
தற்போது, தென்மேற்கு பருவமழை கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. இருப்பினும், தெலங்கானா அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில், கிருஷ்ணா நீர் கிடைக்கும். இதற்காக தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சென்னை மாநகரம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதாகவும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் 4 டிஎம்சிக்கும் அதிகமாக நீர் உள்ளது என்றும் இந்த நீர் இருப்பை வைத்து அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்றும் பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary :Krishna water to Chennai for the departure of the Telangana issue