railwayசென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் முக்கிய வழித்தடத்தில் தினமும் 150-க்கும் மேலான மின்சார ரயில் சர்வீஸ்களும், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு வழக்கமான ரயில்களை காட்டிலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால் ரயில்கள் விரைவாக செல்ல போதிய ரயில்பாதைகள் இல்லை. இதனால் ஆங்காங்கே நிறுத்தி இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் வரையில் மொத்தம் 26 கி.மீ தூரத்துக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்பட்ட இந்த பாதையின் இத்திட்டத்துக்கான தொகை ரூ.149 கோடியில் இருந்து ரூ.218 கோடியாக உயர்ந்தது. தற்போது, திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே மொத்தம் 16 கி.மீ தூரத்துக்கு 4-வது புதிய ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு நடத்தி பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல் அதாவது ஜூலை 10ஆம் தேதி முதல் இந்த புதிய பாதையில் ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஓரிரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. வரும் 15ஆம் தேதி முதல் பெரும்பாலான விரைவு ரயில்கள் இந்த பாதையில் இயக்கப்படும். இந்த வழியாக ரயில்கள் இயக்கப்படுவதால், 90 சதவீதம் சரியான நேரத்துக்கு இயக்கப்படும்.

ஏற்கெனவே, ரயில்கள் 82 சதவீதம் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த 4-வது புதிய பாதை அரக்கோணம் சென்றடைய மீதமுள்ள 10 கி.மீ பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடியும்போது, ரயில்களை சரியான நேரத்துக்கும், தேவைப்படும் போது கூடுதல் ரயில்களையும் இயக்க முடியும்” என்று கூறினர்.

English Summary: Tiruvallur – thiruvalankadu 4 Start of train service on the new route