Tamil neetNATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST(NEET) என்று கூறப்படும் நீட் தேர்வு தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஒருசில விளக்கங்கள் கேட்டு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாகவும் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ‘நீட்’ தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. ‘நீட்’ தேர்வு இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்து அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சக வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களிலும் எந்தெந்த மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது எனக் கேட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அங்கு நடந்த தேர்வின் அடிப்படையில், மாநில மொழிகளில் அடுத்த ஆண்டு முதல் தேர்வு நடத்தப்படும். எனினும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், நாட்டின் அனைத்து மாநில மொழிகளிலும் ‘நீட்’ தேர்வு நடத்துவது சிரமம். இதில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிடும் அபாயமும் உள்ளன. எனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, அசாமி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தலாம் என கூட்டத்தில் ஆலோசனை எழுந்தது. இதன்படியே, அடுத்த ஆண்டு தேர்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.

ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ள ‘நீட்-2’ தேர்வை நாடு முழுவதிலும் சுமார் 4.75 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதன் முடிவுகள் ஆகஸ்ட் 17ஆம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Tamil NEET Examination. The Central Government plans to introduce next year