எதிர்பாராத விபத்துகளில் சிக்கி காது, மூக்கு போன்று முக்கிய உடல் உறுப்புகள் சேதமடையும் போது அவற்றை ‘3டி’ பிரிண்டிங் முறையில் செயற்கையாக தயாரித்து பொருத்தும் முறை வெளிநாடுகளில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த வசதி சென்னைக்கும் வந்துள்ளது.
சாலை விபத்து, தீவிபத்து போன்ற காரணங்களால் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் கவலையை போக்கும் வகையில் தற்போது அதிநவீன ‘3டி’ பிரிண்டிங் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன முறையில் இழந்த உடல் உறுப்புகளான காது, மூக்கு, எலும்பு போன்றவை பாலிஜெட் பிளாஸ்டிக் மூலம் தயாரித்து பொருத்தப்படுகிறது. இதற்கான பணியில் முக எலும்பு சீரமைப்பு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த இந்த சிகிச்சை முறை தற்போது சென்னையிலும் அளிக்கப்படுகிறது.
ஜெயந்த் என்ற 14 வயது சிறுவன் விபத்தில் தனது காது ஒன்றை இழந்ததால் அதை மறைக்க தொப்பி அணிந்தபடியே இருந்தான். சென்னையை சேர்ந்த முக எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான்நேசன் அந்த சிறுவனுக்கு ‘3டி’ முறையில் விரைவில் செயற்கை காது பொருத்த உள்ளார்.
‘பாலிஜெட் பிளாஸ்டிக்‘கினால் தயாரிக்கப்படும் இந்த செயற்கை காது ஏற்கனவே உள்ள காதின் நிறத்துக்கு மாற்றப்படும். பொதுவாக இதுபோன்ற உறுப்புகள் தயாரிக்கும்போது இறந்தவர்களின் உடலில் இருந்தும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மற்றொரு உறுப்பை வைத்தோ மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு உண்மையான உடல் உறுப்பு போன்றே தோன்றும்.
‘3டி’ பிரிண்டிங் செயற்கை முறையில் காது தயாரிக்க ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். அதை 10 நாட்களில் தயாரிக்க முடியும். அதே போன்றும் மூக்கு தயாரிக்கலாம். மேலும் எலும்பு தயாரிக்க ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவாகும். இது டைட்டானியம் உலோகம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்கும் 10 நாளாகும். கல்லீரல் திசு மற்றும் செல்களும் ‘3டி’ முறையில் தயாரிக்கலாம். 12 திசுக்கள் தயாரிக்க 15 நிமிடங்களாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary : 3-D printing system in Chennai artificial ear, nose producing facility