எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. இன்றைய கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 17 இடங்களை பூர்த்தி செய்ய மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
மாற்று திறனாளிகள் 10 இடங்களுக்கு 17 பேர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள் 2 இடத்துக்கு 12 பேர்களும்ம், விளையாட்டு வீரர்கள் 5 இடத்திற்கு 18 பேர்களும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ வீரர்கள் ஒதுக்கீட்டில் கனிஷ்கர் முதலிடத்தை பிடித்து சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். 2-வது இடம் பிடித்த நிவாஷினி நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.
இன்றைய கலந்தாய்வின்போது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கால்நடை மருத்துவ படிப்பு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடந்தது. இதில் தொழில் கல்வி பாடப்பிரிவு உள்பட மொத்தம் 33 இடங்கள் நிரப்பப்படும், நாளை பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. மொத்த முள்ள 239 இடங்களுக்கு 1668 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத மாணவர்கள் கலந்தாய்விற்கு வரமாட்டார்கள். தொழில் நுட்ப பட்ட படிப்புக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் நடக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வை தொடர்ந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடைபெறும். 3-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு இறுதிக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது. நாளை நடக்கும் கலந்தாய்வில் 10 மாணவர்களுக்கு அமைச்சர் ஒதுக்கீட்டு கடிதம் வழங்குகிறார்.
கால்நடை மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள் ஓராண்டு படித்து விட்டு 2-ம் ஆண்டில் படிப்பை பகுதியில் விட்டு சென்றால் அபராதம் விதிக்கும் நடைமுறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நஷ்டத்தை ஈடு செய்ய ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும் ஓராண்டு படித்து விட்டு அந்த மாணவர்கள் 2-வது ஆண்டு வகுப்பிற்கு செல்லும் போது 20 சதவீதத்திற்கு மேல் இடங்கள் காலியாகின்றன. அந்த காலி இடத்தை நிரப்ப புதிய முயற்சி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கால்நடை படிப்பு படிக்க வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்களுக்கு அந்த வாய்ப்பை 2-வது ஆண்டில் கொடுக்கும் வகையிலான திட்டத்தை அரசுக்கு அனுப்பியுள்ளோம். காலி இடங்களில் அவர்கள் சேரும் போது முதல் ஆண்டு பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அதனை ஈடு செய்ய வழி வகை காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : If you stop in between the Rs 3 lakh fine of Veterinary Medical Study: Vice Chancellor