சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐகோர்ட் அறிவுரையின்படி அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க மாநில அரசும், ரெயில்வே நிர்வாகமும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
முதல்கட்டமாக தெற்கு ரெயில்வேயில் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும்பணி நடைபெற்று வருகிறது. இதில் 82 ரெயில் நிலையங்கள் சென்னை கோட்டத்தில் உள்ளன. அதன்படி சென்னையில் அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தப்படும். இவை தவிர மேலும் 96 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 43 ரெயில் நிலையங்கள் சென்னை கோட்டத்தில் உள்ளன.
ரெயில்வே பாதுகாப்பு படையில் 140 பேர் கொண்ட பெண்கள் பாதுகாப்பு படை ஒன்றும் விரைவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில்வே பாதுகாப்பு படை ஒரு கம்பெனியும் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் 3 ரெயில் நிலையங்களில் ஒவ்வொரு மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர் என்று தெற்கு ரெயில்வே பாதுகாப்புபடை தலைமை கண்காணிப்பு ஆணையர் பாகி தெரிவித்தார்.
English Summary : Swathi Echo of slaughter.Chennai railway station Installing work intensity on the CCTV camera