Medical Records & Stethoscopeஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடந்தது. 2ஆம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளித்து கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சமூக ஆர்வலர் ஆனந்த்ராய் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சில மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வந்ததன் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோடு, மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்தது. பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும், நாடு முழுதும் 17 மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மாணவ மாணவியர் நுழைவு தேர்வு எழுதியுள்ள நிலையில் தற்போது அவசரச்சட்டத்துக்கு தடை விதித்தால் அது பெரும் குழப்பத்தில் கொண்டு போய் விடும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நீட் அவசரச்சட்டம் ஐயத்திற்கு இடமளிக்கக் கூடியதே. ஆனால் 50 சதவீத மாநிலங்கள் ஏற்கெனவே தேர்வுகளை நடத்தி விட்டன. எனவே அவசரச் சட்டத்துக்கு இந்நிலையில் தடை விதிக்க முடியாது. ஆனாலும், மே 9-ம் தேதி நாங்கள் அளித்த உத்தரவை புறக்கணித்து மாநிலங்கள் பல தங்களது தேர்வுகளை நடத்தின. இது சரியானதல்ல. 36 மாநிலங்களில் 17 மாநிலங்கள் தேர்வுகளை நடத்தியுள்ளன.

எங்களது உத்தரவையும் மீறி அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தது முறையானதல்ல. இது தேவையற்றது. இப்படி செய்திருக்கக் கூடாது. மாநில அளவு தேர்வுகள் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்வுகளுக்காக அவசரச்சட்டம் இயற்றினால் எங்கள் உத்தரவை மதிக்கவில்லை என்றே பொருள். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா? இவர்கள் நம் மாணவர்கள் அல்லவா?” என்று நீதிபதி தவே அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹாட்கியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ரொஹாட்கி, அரசு நினைத்திருந்தால் மே 9 சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படவிடாமல் நீட் என்ற ஒன்றையே மொத்தமாக ரத்து செய்திருக்க முடியும், ஆனால், “அரசு அவ்வாறு செய்யவில்லை. அவசரச்சட்டம் நீட் அறிவிக்கையில் திருத்தம் மட்டுமே செய்துள்ளது. அரசின் அவசரச் சட்டம் மீது மாநில அரசுகளுக்கோ, மாணவர்களுக்கோ குறைபாடு இருந்தால் அவர்கள்தான் கோர்ட்டுக்கு வரவேண்டும். ஆனால் இப்போது மனு செய்துள்ளது யார்?” என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு பதில் அளித்த நீதிபதி தவே, “உங்கள் அவசரச்சட்டம் தேவையற்றது. நாங்கள் நாடுமுழுதும் ஒருமித்த தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே உத்தரவு பிறப்பித்தோம்” என்று கூறினார்.

English Summary :Medical entrance exam for the central Government’s ordinance obstruction? Supreme Court Important judgment