இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து செக் குடியரசு நாட்டிற்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை அடுத்து அந்நாட்டிற்கு செல்வதற்கான விசா விண்ணப்ப மையம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹோவர்கா சென்னை எழும்பூரில் நேற்று இந்த மையத்தை தொடக்கி வைத்தார். இதுவரை செக் குடியரசு விசா பெற தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெங்களூருக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையத்தைத் திறந்த வைத்த செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹோவர்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து செக் குடியரசுக்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 13 ஆயிரம் பேருக்கு விசா அளிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசின் விசா பெற டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடத்துக்குச் சென்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது. தற்போது, “விஎஃப்எஸ் க்ளோபல்’ நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஐதராபாத், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் விசா மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இரு நாடுகளிடையே இயந்திர உதிரிப்பாக வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இதற்காக, அவுரங்காபாத், புனே ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2015-இல் மட்டும் ரூ. 8400 கோடி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய உணவுகளுக்கு செக் குடியரசில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்காக, இந்திய உணவக நிறுவனங்கள் செக் குடியரசில் தங்கள் கிளைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
“தத்ரா’ என்னும் ராணுவ தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்கியுள்ளோம். அதோடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் பெரிய பாதிப்புக இல்லை. அத்துடன், செக் குடியரசு ஐரோப்பிய யூனியனில் நிலையாக இருக்கவே விரும்புகிறது. அவ்வகையில், இந்தியாவுடனான நல்லுறவு சிறப்பாகவே உள்ளது என்று கூறினார்.
English Summary :The opening of the visa center in Chennai, Czech-Republic