தமிழகத்தில் ஆதார் அட்டையைப் பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இன்னும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். மேலும் கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றின் அடிப்படையில் 87.53 சதவீதம் பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமகனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் அட்டையை பெறுவதில் அனைத்துத் தரப்பினரிடமும் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணைப் பெற முதலில் நமது அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்கள், பாரத மிகுமின் நிறுவனத்தின் கணினி சேமிப்புப் பிரிவில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்லிடப்பேசி எண், கருவிழி, கைவிரல் ரேகைகள் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பயோ- மெட்ரிக் எண் வழங்கப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் சில வாரங்களுக்குப் பிறகு, ஆதார் எண் கிடைக்கும்.
95.32 சதவீதப் பதிவு: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து ஆதார் எண்ணைப் பெறுவதற்காக 95.32 சதவீதம் பேர் தங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவல்களைப் பதிவு செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி மையம் செயல்பட்டு வருகிறது.
அடிப்படைத் தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இதுவரை 87.53 பேருக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 94.52 சதவீதம் பேருக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணை இயக்குநர் கிருஷ்ணாராவ் கூறியது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மக்கள் தொகையின் அளவு கணிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகருக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடிபெயரும்போது அவர்கள் ஆதார் எண்ணைப் பெற விண்ணப்பம் செய்வார்கள். இதனால், அந்தக் குறிப்பிட்ட மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையைவிட ஆதார் பதிவுக்கான எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த அடிப்படையிலேயே, சென்னை, தேனி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் ஆதார் பதிவுக்கான எண்ணிக்கை 100 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது.
மேலும் ஆதார் எண் பெறும் போது அளித்த அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் சரியானனவையா, தற்போது அதில் ஏதும் மாற்றம் இருக்கிறதா போன்ற அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன.
இந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகு ஆதார் அட்டையை எந்த வடிவத்தில் வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்யும். இப்போது ஆதார் எண் வழங்கும் போது அது ஒரு காகிதத்தில் மட்டும் அச்சிடப்பட்டு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இணைய சேவை மையங்களில் வழங்கும் பிளாஸ்டிக் அட்டைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் அதுவே இறுதியானது அல்ல.
ஆதார் எண்ணில் தெரிவித்த அடிப்படை விவரங்கள் அனைத்தும் வீடு வீடாகச் சரிபார்க்கப்பட்டு அந்த இறுதித் தகவல்களைக் கொண்டு ஆதார் அட்டை வடிவமைக்கப்படும். ஆனால், யாருக்கும் ஆதார் எண் மாறாது. இதன்மூலம், ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உறுதியானதாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
English Summary: Start the process of verifying the Aadhaar card information.