இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் உள்ள நிலையில் இன்னும் நான்கு வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் 4ஆம் கட்டமாக இன்று முதல் அதாவது ஜூலை 18 முதல் வெளியிடப்படவுள்ளன. வங்கிகள், குறிப்பிட்ட தபால் அலுவலகங்கள், தேசியப் பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வாயிலாக முதலீட்டுப் பத்திரங்களை ஜூலை 22ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான தொகை கிராமுக்கு ரூ.3,119-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்சமாக ஒரு கிராம் மதிப்பிலான பத்திரத்தில்கூட முதலீடு செய்யலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1,000 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. நாட்டின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால், நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் எழுந்தது. மேலும், இந்தியாவில் சுமார் ரூ.52 லட்சம் கோடி மதிப்பிலான, 20,000 டன் தங்க நகைகளும், கட்டிகளும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தங்கத்தை நேரடியாக வாங்குவதைக் குறைக்கும் வகையில், அதன் மீது முதலீடு செய்து பணம் ஈட்டும் மூன்று திட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அவற்றில் ஒன்றுதான் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டம்.
இந்தத் திட்டத்தின்படி, தங்கத்தை நகையாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்குவதற்குப் பதிலாக, அதன் மதிப்பிற்கேற்ப பத்திரங்களில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரையிலான மதிப்புடைய தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதன் மதிப்புக்கேற்ப ஆண்டுக்கு 2.75 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகளாகும். குறைந்தது 5 ஆண்டுகளாவது தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மூன்று கட்டங்களாக தங்க முதலீட்டுப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. மொத்தமாக 4,900 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.1,318 கோடி வருவாய் திரட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்க முதலீட்டுப் பத்திரங்களை நான்காம் கட்டமாக இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டுத் தொகை கிராமுக்கு ரூ.3,119-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 5 கிராம் தங்கப் பத்திரமே குறைந்தபட்ச முதலீட்டு அளவாக இருந்தது. தற்போது அதை 1 கிராமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இதையடுத்து, 1 கிராம், 5 கிராம், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் ஆகிய மதிப்புகளில் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் வெளியிடப்படவுள்ளன.
English Summary :The central government plans to invest in gold. Release from today to Friday