annauniversitycounsellingபொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், 27 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாகவும், மற்ற கல்லூரிகளில் முழுமையான சேர்க்கை நடைபெறவில்லை என்றும், ஒருசில கல்லூரிகளில் மிகக்குறைந்த அளவே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 100 சதவித மாணவர் சேர்க்கை என்பது பெரும்பாலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த மாதம் 21ஆம் தேதி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு வரும் வியாழனுடன் முடிவடைகிறது. தொடக்கத்தில் மொத்தமுள்ள 527 பொறியியல் கல்லூரிகளில் 1,85,670 இடங்கள் இருந்தன. 3 நாள்களில் நிறைவடைய உள்ள நிலையில், 65,989 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 1,19,681 இடங்கள் காலியாக உள்ளன. இதுவரை அழைக்கப்பட்டவர்களில் 33,198 பேர் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.

27 கல்லூரிகளில் 100%: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், இதுவரை 27 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத அளவுக்கு இடங்கள் நிரம்பியுள்ளன. மற்ற 500 கல்லூரிகளில், 148 கல்லூரிகளில் அனைத்துப் படிப்புகளிலும் சேர்த்து 50-க்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடைபெற்றுள்ளது.

வரவேற்பு குறைந்த கட்டடவியல்: கடந்த ஆண்டுகளில் பி.இ. (சிவில்) கட்டடவியல் படிப்பின் மீது அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். நிகழாண்டில் இந்தப் பிரிவில் 27,411 இடங்களில் 6,590 பேர் என 24 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

அடுத்தப்படியாக இயந்திரவியல் பிரிவில் 34 சதவீத இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் 36 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன. கணினி அறிவியல் (சி.எஸ்.இ.) படிப்பில்தான் அதிகபட்சமாக 38 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள சில கல்லூரிகள் விரைவில் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்துள்ளன. பொறியியல் இடங்கள் 90 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ள, குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்களை சேர்த்துள்ள கல்லூரிகள் மாணவர்களை பருவத் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயார் செய்யும் நோக்கத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளன.

இதுகுறித்து கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.நாராயணசாமி கூறியது:-

கடைசி இடம் வரை நிரம்பிய பிறகே வகுப்புகள் தொடங்க வேண்டும் என்பதற்காக, கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-இல் தொங்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 1 அல்லது அதற்கு முன்னதாகத் தொடங்கிவிடவேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : BE in 3 days Counseling ends up: 1,19,681 seats available