DSC_0147[1]ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்று போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு சரியாக பராமரிக்காவிட்டால் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டிடம் கடந்த சில வருடங்களாக முறையாக பராமரிக்கவில்லை என்று ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை சமீபத்தில் விசாரணை செய்த சென்னை ஐகோர்ட்டு, அண்ணாநூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையராக நியமித்தது. இந்த வக்கீல்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலைஇயில் இந்த வழக்கு மீண்டும் நேற்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த ஐகோர்ட்டு பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை முறையாக அதிகாரிகள் பராமரிக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வக்கீல் கமி‌ஷனர்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து குறைகளையும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சரி செய்யப்படும்’ என்று உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் ‘இந்த வழக்கை வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்யவேண்டும். அதை அரசு செய்யவில்லை என்றால், நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை இந்த ஐகோர்ட்டு உருவாக்கும். அந்த தனியார் அமைப்பு நூலகத்தை பராமரிக்கும். அதற்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டியது வரும்’ என்று எச்சரிக்கை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary : Anna library handed over to the private. Court Warning to the Tamilnadu govt