41977346சென்னையில் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல ருசியுள்ள தரமான மீன்கள் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி, ரூ. 8கோடி செலவில் மொத்த விற்பனை மீன் அங்காடி ஒன்றை கோட்டூர்புரத்தில் விரைவில் அமைக்கவுள்ளது. இதனால் மீன் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நடுக்குப்பம், கலங்கரை விளக்கம், வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, செங்குன்றம் ஆகிய பகுதிகளில், கடல்சார் உணவு பொருட்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகரில், சில்லரையில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள், மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்ய இந்த பகுதிக்கு வருவதுண்டு. சென்னை கடல் பகுதியில் பெரிய அளவில் மீன்வளம் இல்லாததால் நாகப்பட்டினம், துாத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் இங்கு விற்கப்படும் மீன்களின் விலை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுவது உண்டு.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களால், அதிக ருசியுள்ள மீன்களை வாங்கி ருசிக்க முடிவதில்லை. இதனை ஒழிக்கும் வகையில், மீனவர்களே நேரடியாக மீன்களை மொத்த விற்பனை செய்யும் மீன் அங்காடியை, சென்னை, கோட்டூர்புரத்தில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதில், மொத்த மீன் விற்பனைக்காக, 68 கடைகள் அமைக்கப்பட உள்ளன. அந்த கடைகளில், தமிழகத்தின் பல்வேறு கடல் பகுதிகளிலும் பிடிக்கப்படும் மீன்கள், நள்ளிரவு, 1:00 முதல் காலை, 6:00 மணிக்குள், சில்லரை வியாபாரிகளுக்கு விற்கப்படும்.

இந்த மொத்த விற்பனை மீன் அங்காடி, கோட்டூர்புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான, 10 ஏக்கருக்கும் மேலான இடத்தின் ஒரு பகுதியில் கட்டப்படுகிறது. மொத்தம், 7.94 கோடி ரூபாய் செலவிலான மீன் அங்காடி கட்டும் பணிகள், கடந்த மாதம் துவங்கியது. ‘அடுத்த மாதத்திற்குள், அங்காடி கட்டும் பணிகள் நிறைவடையும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, “கோட்டூர்புரத்தில் அமைய உள்ள மொத்த விற்பனை மீன் அங்காடி, மீனவர்கள், சில்லரை மீன் வியாபாரிகள், மக்களிடம் வரவேற்பை பெற்றால், நகரின் பல பகுதிகளிலும் இதுபோன்ற அங்காடிகள் துவங்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன், இந்த முதல் மொத்த விற்பனை மீன் அங்காடி பயன்பாட்டிற்கு வரும். பல டன் எடை கொண்ட மீன்கள், ஒரே இடத்தில் விற்பனைக்கு வருவதால், வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற, அடையாறு ஆற்றை ஒட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும்.

English Summary: Wholesale Fish Market in Kotturpuram.Chennai Corporation