வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல பொது இடங்களில் வைஃபை வசதியை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலனுக்காக செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் ‘வை-பை’ வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாநகராட்சி பூங்காக்கள் மதுக்கூடங்களாக இருந்த காலம் மாறி தற்போது பூங்காக்கள் புத்தம் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. மேலும் பல பூங்காக்களில் திரைத்துறையினர் மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறையினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இதுநாள் வரையில் ‘ஷூட்டிங்’ நடத்துவதற்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி வரும் காலங்களில் கட்டணம் வசூலிக்கவும், அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி பூங்காவிற்கு பொதுமக்களை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக பூங்காக்களின் சிறப்புகள் இடம்பெற்ற வீடியோ காட்சிகளை யூடியூபில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் பூங்காவிற்கு வரும் பொதுமக்களை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 669 பூங்காக்களிலும் ‘வை-பை’ வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பூங்காக்களில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து வை-பை வசதிகளை வழங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அனைத்து பூங்காக்களிலும் வை-பை வசதியை ஏற்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உடனடியாக இதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து கோப்புகளை தயார் செய்து திட்டத்தை நிறைவேற்றுமாறு கமிஷனர் கார்த்திகேயனுக்கு அறிவுறுத்தியுள்ளார்’ என்று கூறினார்.
வை-பை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கட்டணம் குறித்து அரசு தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி பூங்காக்கள், மெரினா கடற்கரையில் வை-பை வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அரசு கேபிள் டி.வி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே சென்னை பூங்காக்களில் விரைவில் வை-பை வசதி வர இருப்பதால் இளைஞர்கள், தொழில் சார்ந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் அதிகளவு கூடுவார்கள்.
English Summary: Wi-Fi facility in Chennai soon parks. Tamil Nadu government’s new program