TH-CHENNAI_METROgவிமான நிலையம் – சின்ன மலை மெட்ரோ ரயில் ஆய்வு முடிந்தது. விரைவில் சேவை தொடக்கம்

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வரும் சேவையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலந்தூர் வரை இயங்கி கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் தற்போது ஒரு சரியாக ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் விரைவில் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையின் முக்கியமான வழித்தடமான விமான நிலையம் – சின்ன மலை வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக, நேற்றைய நிலவரத்தின் படி சிக்னல் அமைப்பு, தொலைத் தொடர்பு அமைப்பு மற்றும் தண்டவாள அமைப்பு ஆகியவற்றை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையாளர் சுதர்சன் நாயக் ஆய்வு செய்தார்.

ஒரு ரயில் வழித்தடத்தில், பேட்டரியால் இயங்கும் 3 டிராலிகளும், மற்றொரு ரயில் வழித்தடத்தில், டீசல் ரயில் என்ஜினும் நிறுத்தப்பட்டிருந்தன. டிராலியில் பாதுகாப்பு ஆணையர், நிர்வாக இயக்குநர் சி.பங்கஜ் குமார் பன்சால் மற்றும் பொறியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மற்றொரு ரயில் பாதையில் டீசல் என்ஜினும் மெதுவாக இயக்கப்பட்டது. சுமார் எட்டு மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.

நேற்று பகல் 2 மணிக்கு மேல் மதிய உணவுக்கு பிறகு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள், ஆலந்தூர் முதல் சின்ன மலை வரை ஆய்வு செய்தனர். ஆலந்தூரில் நிலத்தடி ரயில் வழித்தடமும் ஆய்வு செய்யப்பட்டது. வழித்தடத்தின் நடுவே அங்கு டிராலியை நிறுத்தி, நவீன இயந்திரங்கள் மூலம் ரயில் தடத்தை பார்வையிட்டார் நாயக். முழுப் பாதையும் சரியான முறையில் இருப்பதாகவும், ஆகஸ்ட் இறுதியில் இயக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

“என்னுடைய பணி மெட்ரோ ரயில் பாதுகாப்பாக உள்ளதா என்றும், ரயில்களை இயக்கலாமா என ஆய்வு செய்வதும்தான். திட்டமிட்டபடிதான் பணிகள் நடந்து வருகின்றன. திருமங்கலம் – எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ஆய்வு நடத்தப்படும்” என்று நாயக் மேலும் தெரிவித்தார். இந்தியாவில், விமான நிலையத்துடன் சேர்ந்து இருக்கும் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயக், தனது ஆய்வறிக்கையை இன்னும் பத்து நாட்களுக்குள் அரசிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் முடிவிற்கு இணங்க மெட்ரோ ரயில் சேவை இந்த வழித்தடத்தில் துவங்கப்படும்.

English Summary :Chennai Airport – Chinna malai Metro was able to test drive. Service to Start Soon