ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி தலைமை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அலுவலகம் வரும் 31-ம் தேதி வரை செயல்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து வருமான வரித் துறை ஆணையர் (நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை) பழனிவேல்ராஜன் கூறியதாவது:-
2015-16-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டர்கள் வரும் 31-ம் தேதி வரை நான்கு நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை தேவைப்பட்டால் எங்கள் துறையின் ஊழியர்கள் கூடுதல் நேரம் (இரவு 7.30 மணி வரை) பணிபுரிந்து வருமான வரி செலுத்துவோருக்கு உதவுவார்கள்.
இந்த முகாமில், ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை உள்ளவர்கள் மட்டும் தங்களது வருமான வரிக் கணக்கை உரிய படிவம் மூலம் தாக்கல் செய்யலாம். இப்பணியில், வருமான வரித் துறையின் 50 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.
ஆன்-லைன் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, படிவம் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. அதனால்தான் ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறுவோருக்காக மட்டும் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அவசியம். அதனால் நிரந்தர கணக்கு எண்ணைச் சரிபார்க்க தனி கவுன்ட்டர் உள்ளது. முதியோருக்காகவும் தனி கவுன்ட்டர் இருக்கிறது.
வருமான வரிச் சட்டத்தின் 139 (1)-ன்படி ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு வரி செலுத்தினால், தாமதமாக செலுத்துவதற்காக வட்டி செலுத்த நேரிடும் என்று பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
English Summary :Filing income tax. Extension of time until August 5