சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரையில் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து அதிமுக எம்.பி வி.மைத்ரேயன் மாநிலங்களவையில் பேசியபோது, “விக்கிரவாண்டி – கும்பகோணம் -தஞ்சாவூர் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்எச்:45சி) விரிவாக்கப் பணிகள் காலதாமதம் ஏற்படுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் மன்சுக் வி. மாண்டவ்யா கூறியதாவது:
விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தட தேசிய நெடுஞ்சாலை (என்எச்: 45சி) விரிவாக்கப் பணிகள் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் 4-இன் கீழ் வருகிறது. இத்திட்டத்தில் 165 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை முழுவதும் நான்கு வழிப்பதையாக மாற்றப்பட்டுள்ளது.

தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் இரண்டரை ஆண்டுகளில் பணி நிறைவு செய்யப்படும். அதேபோல் சென்னை தாம்பரம் – விக்கிரவாண்டி இடையே தேசிய நெடுஞ்சாலை (என்எச் 45) தற்போது நான்கு வழிப்பாதையாக உள்ளது. இதை ஆறு வழிப்பாதையாக மாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

English Summary :Tambaram-Tindivanam to change the six-lane road inspection. Central Minister