no-more-ration-card1குடும்ப அட்டை இல்லாமலே ரேஷன் பொருள்கள் பெறும் வசதி செப்டம்பர் முதல் கடலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதூ.

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்படும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முதற்கட்டமாக குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களுடன், அட்டைதாரரின் செல்லிடப்பேசி எண், ஆதார் அட்டை எண், அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை எண் ஆகியவை விற்பனை முனைக்கான (Point of Sale) என்ற சிறிய அளவிலான இயந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த திட்டம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டு அங்குள்ள அனைத்து அட்டைகளின் விவரமும் இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக கடலூர், விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

விற்பனை முனைக்கான இயந்திரத்தில் அட்டைதாரர்களின் விவரங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்கள், உதவி வட்டாட்சியர்கள், உதவி தர இயக்குநர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஜூலை மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேல் கூறியதாவது: 2ஆம் கட்டமாக மாவட்டத்திலுள்ள 1,414 நியாய விலைக் கடைகளிலும் பணியாற்றும் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி அடுத்த வாரங்களில் 5 வட்டங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது. பயிற்சியின் போதே விற்பனையாளர்களுக்கு இந்த இயந்திரம் வழங்கப்படும். அதில் குடும்ப அட்டைதாரர்களின் விவரம் பதிவு செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் 7.04 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் பதிவுகளும் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு, நியாய விலைக் கடைக்கு வந்துள்ள பொருள்கள், அவற்றின் இருப்பு விவரங்கள் குறுந்தகவலாக அனுப்பப்படும். அந்த தகவலை எடுத்து வந்தாலே பொருள்கள் வழங்கப்பட்டுவிடும். செல்லிடப்பேசி இல்லாமல் ஆதார் எண் மட்டுமே வழங்கியவர்கள் தங்களது விரல் ரேகைப் பதிவினை பதிவு செய்தால் அவர்களுக்கான பொருள்கள் வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு அட்டைதாரரின் விவரம் பதிவு செய்யப்பட்டாலே அவர் அடுத்தமுறை கடைக்கு வரும் போது செல்லிடப்பேசியை எடுத்து வந்தாலே போதுமானது. இத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அட்டைதாரர்களின் பதிவுகளையும் பதிவேற்றம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை முனைமம் இயந்திரம் மூலமாக, குடும்ப அட்டை இல்லாமல் பொருள்களை பெற்றுச்செல்லும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

எனவே பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசி எண், ஆதார் அட்டை எண்ணை கண்டிப்பாக நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

English Summary: The family card does not need.If the cell phone is enough.The first new program went into effect in September