மறைந்த நகைச்சுவை நடிகர் பசி’ நாராயணன் குடும்பத்தில் வறுமையில் வாடுவதாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு அவரது குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி இன்று ‘பசி’ நாராயணனின் மனைவி வள்ளிக்கு ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “அன்பே வா”, “ஆயிரத்தில் ஒருவன்” உள்பட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் பிரபல திரைப்பட நடிகர் மறைந்த “பசி” நாராயணன். சமீபத்தில் உடல்நிலை கோளாறு காரணமாக அவர் மரணம் அடைந்ததும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு வேறு வழியின்றி வறுமையில் தவித்தனர்.
இந்த தகவல் முதல்வர் கவனத்திற்கு வந்தவுடன் 10 லட்சம் ரூபாய் வள்ளியின் பெயரில் “தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்” வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125/- ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் வகையில் முதல்வர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இதன்படி, “பசி” நாராயணனின் மனைவி வள்ளிக்கு ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. முதல்வரிடம் இருந்து நிதியுதவியை பெற்றுக் கொண்ட வள்ளி, தனது நெஞ்சார்ந்த நன்றியினை ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, வள்ளியின் மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் உடனிருந்தனர்.
English Summary : The late actor ‘Pasi’Narayan wife financed by Chief Minister