தற்போதைய இண்டர்நெட் உலகில் சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை கடைகளுக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கெனவே இயங்கும் தனியார் நிறுவனங்கள் டோர் டெலிவரி சேவைகளை வழங்கி வருவதால் பொதுமக்களுக்கு பெரும் வசதியாக உள்ளது. இந்நிலையில் இனிமேல் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளையும் ஆன்லைனில் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது 13 இகாமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது. இதன்மூலம் இனிமேல் காஞ்சிபுரம் பட்டையோ, மங்கள்கிரி பருத்திப் புடவையையோ, கோவை பட்டையோ ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நெசவாளர்களிடம் இருந்து அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கைத்தறிப் பொருட்களை ஈ காமர்ஸ் மூலம் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வடிவமைத்து வரும் கொள்கையையை தொடர்ந்து அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 இகாமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.
இந்த விற்பனையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அதே நேரம் அவர்கள், தங்களின் இணையதளத்தில் கைத்தறி வணிகத்துக்காக தனிப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் குறிப்பிட்ட நெசவாளர்களோடு இணைந்து விற்பனை செய்யும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆடைகளில் கைத்தறி சின்னமோ, இந்திய கைத்தறி அடையாளமோ இருக்க வேண்டும்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலோக் குமார், ”இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த வருடத்தில் ரூ 1.7 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. சில நிறுவன இணையதளங்கள் இரண்டு அல்லது மூன்று நெசவாளர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.எங்களுடையது வெளிப்படையான கொள்கை. இப்போது வரை எங்களுடன் 13 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இன்னும் சில ஈ காமர்ஸ் நிறுவனங்களும் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இணையதள இணைப்புகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள், மற்ற சங்கங்கள் மற்றும் நெசவாளர்களே இவற்றை விற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி” என்று கூறினார்
கடந்த அக்டோபரில் கைத்தறி வளர்ச்சி ஆணையத்துடன் இணைந்துள்ள அமேசான் நிறுவனம் கைத்தறி புடவைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 4,000 பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. அந்நிறுவனம் ராஜஸ்தான் (கோட்டா) நெசவாளர்கள், மேற்கு வங்கம் (நாடியா), ஒடிஷா (பர்ஹார்) மற்றும் தெலங்கானா (போச்சம்பள்ளி) நெசவாளர்களோடு இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கைத்தறிப் புடவைகளை ஆன்லைனில் வாங்கத் தனிப்பிரிவு வைத்திருக்கும் நிறுவனங்கள் சிலவற்றின் விவரம்:
ஷாதிகா இணையதள இணைப்பு: ஷாதிகா
கோகூப் இணையதள இணைப்பு: கோகூப்
அமேசான் இணையதள இணைப்பு: அமேசான்
English Summary: Online sales in the silk. 13 e-commerce companies to join with hands