கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். வாக்களிக்கும் நேரத்தில் அதிமுக எம்.பிகள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தடைகளைக் கடந்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். அப்போது, ஜி.எஸ்.டி மசோதாவால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பெருகும் என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதாவால் மத்திய அரசை விட மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என்றும் வரி ஏய்ப்புகள் குறையும் என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அ.தி.மு.க. கோரிய திருத்தங்களை மசோதாவில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே, விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்புக்கு தயாராகும்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஜி.எஸ்.டி. மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட 197 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர்ப்பின்றி மசோதா நிறைவேறியது. இதையடுத்து திருத்தப்பட்ட மசோதா மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்
English Summary :GST in Rajya Sabha The act passed