தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் ஆசிரியர் பயிற்றுவிப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கடந்த 1891ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மதுரையில் 1974, திருச்சி, கோவையில் 1979, நெல்லையில் 1996, செங்கல்பட்டில் 2006, வேலூரில் 2008-ல் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த 7 சட்டக் கல்லூரிகள் மூலம் மொத்தம் 9,366 மாணவ, மாணவிகள் வருடந்தோறும் வழக்கறிஞர் ஆகின்றனர்.
இந்த 7 கல்லூரிகளும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கான முதல் பல்கலைக்கழகமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு (ஹானர்ஸ்) சட்டப்பள்ளி வாயிலாக பிஏ எல்எல்பி, பி.காம் எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி மற்றும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளில் மொத்தம் 780 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டக்கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 145 மாணவர்கள் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏராளமான மாணவர்கள் படித்தாலும், சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தற்போது 300-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பல கல்லூரிகளில் பற்றாக்குறையைப் போக்க தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் பகுதிநேர விரிவுரையாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் சட்டத்தோடு மிக நெரு கிய தொடர்புள்ள பாடங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தென்னிந்தியாவில் அனைத்து வசதிகளுடன், தரம் வாய்ந்த டிஜிட்டல் ஆசிரியர் பயிற்றுவிப்பு மையத்தை சென்னை பெருங்குடி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்க பல்கலைக்கழக நிர்வாகம் யுஜிசிக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளைவிட சட்டக்கல்வி மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சட்டக் கல்வி கட்ஆப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுத் திறனை அதிகரிப்பதும் அவசியம் சென்னை பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் பயிற்று விப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கும்’ என்று கூறினார்.
English Summary: Digital training college for teachers of law.In Chennai southern India for the first time to set up consultation